Thursday, January 28, 2010

உணர்வாயா நீ…!

குமுறி எழும் கண்ணீரை
கைக்குட்டைக்குள் புதைத்தபடி

ஒரு முறை அல்ல
ஓராயிரம் முறை
அடித்தடித்து சொல்லியாயிற்று
நான் உன்னை நேசிப்பதாய்.

என் இதயத்தை பிளந்து பிளந்து
எத்தனை தடவை காட்டியுமாயிற்று
உன் மீது நான் கொண்ட நேசத்தை
இதை புரிவாயா நீ….!

இந்த உலகில்
உனக்கு யாரைப் பிடிக்கும் என்று
என்னை யாரும் கேட்டால்…

என் விழிகள் இரண்டும்
உன்னை நோக்கி
கணைகளை வீசும்.

என் சுண்டு விரல் கூட
உன்னை நோக்கி நீண்டு
உன்னையே சுட்டிக் காட்டும்.

எப்போதாவது
என் நேசத்தை
புரிந்து கொண்டாயா நீ….?

உனக்கெங்கே
இந்த ஏழையின்
நேசமும், பாசமும்
புரியப் போகின்றது…?

விடியலுக்கு முந்திய
அந்த இருட்டினிலே
விழி நிறைந்த கனவுகளுடன்
நாம் சிரித்து மகிழ்ந்திருந்த
அந்தக் கணப் பொழுதுகள்
இன்னும் என் உயிரோடு ஒட்டி
உணர்வோடு ஊசலாடிக் கொண்டே இருக்கிறது.

உனக்குள் நான் தொலைந்திருக்கிறேன்
இனியாவது தேடிக் கொள்வாயா…?

உன் நினைவில் நான்
கரைந்து போனது மட்டுமல்ல
உறைந்தே போயிருக்கின்றேன்
இதை உணர்வாயா நீ…?

அன்றைய நினைவு தேனாய் இனிக்கின்றது இன்றைய நிஜம் அனலாய் சுடுகின்றதே......

வலிக்கின்றது
உயிரைக் கேடயமாக்கி
கண்ணைக் காக்கும் இமை
போல் இரவு பகலாய் என்னை
அரவணைத்தாய் காற்றுக் கூட
என்னைத் தீண்டாமல்....

ஊமையானாய் வார்த்தைகளை
மெளனமாக்கி எனக்காக
கண்ணிமைகளை சாமரமாக்கி
எனக்கு வியர்க்காது வீசினாய்....

வெயில் என்னைத் தீண்டா
வண்னம் கரங்களைக்
குடையாக்கினாய்....

இருக்கையாக்கினாய் உன்
கால்களை எனக்கு
உன்னை எனக்கு உயிராக்கினாய்

நிலம் போல் தாங்கினாய்
நிலவு போல் குளிர்வித்தாய்
வைரம் போல் ஜொலிக்க
வைத்தாய்....
ஆக்கினாய் வாழ்வை பசுமையாய்

எனக்காக எனக்காக எல்லாமே
எனக்காக நான் சிரித்தால் நீயும்
சிரித்தாய் அழுதால் நீயும் அழுதாய்
நான் துடித்தால் நீயும் துடித்தாய்
என் கண்ணில் தூசு விழுந்தால்
உன் கண்கள் கண்ணீர் வடித்தது

என் செயலே உன் செயலாய்
என் உருவமே உன் உருவமாய்
எனக்காக எல்லாம் செய்தாய்
ஆனால் செய்யாமல் விட்டு
விட்டாயே என்னை திருமணம்....

உன் நினைவை வாழ்வாக்கி
கனவை துணையாக்கி விட்டு
கரம் மாறி கைப்பிடித்து சென்று
விட்டாயே....

அன்றைய நினைவு தேனாய்
இனிக்கின்றது
இன்றைய நிஜம் அனலாய்
சுடுகின்றதே......

Wednesday, January 27, 2010

சொல்லாத பிறந்த நாள் வாழ்த்து

உன் பிறந்த நாளை மறந்துவிட்டு எத்தனையோ முறை உன்னிடம் குட்டு வாங்கியிருக்கிறேன்;
அப்போதெல்லாம் உணராத வலியினை திரட்டிவந்து கொல்கிறது இப்போது தவறாமல் வந்துவிடும்
உன் பிறந்த நாளின் நினைவு


பனிரெண்டு மணி தாண்டி அரைத்தூக்கத்தில் வாழ்த்துச் சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?

Monday, January 25, 2010

இறுதியாக கேட்டுச் செல்!

வேண்டும் என்று
எமை விரட்டி வரும்
வேண்டாத வேதனைகள்!


ம்…!
பிரிவுகள் என்பது
உனக்குள்ளும் எனக்குள்ளும்
இறுதிவரை இல்லை
என்றுதானே இருவரும்
இறுமாப்புக் கொண்டிருந்தோம்…?

இதற்குள் எப்படி
இருவரையும் மீறி
இப்படி ஒரு பிரிவு…?

ஓ…!
என் மனதை
புரிந்து கொள்ளாமல்…

பூ மீது
ஆணி அடிக்கும்
வலியை தந்து
பிரிந்து செல்கிறேன் என்கிறாய்!

ம்… சரி
பிரியப் போகும் இவ்வேளையில்
ஒன்று சொல்கிறேன்
இதையும்
இறுதியாக கேட்டுச் செல்!

பிரிவு என்பது
எனக்கும் உனக்கும் மட்டும்தான்
நம் காதலுக்கு அல்ல

Sunday, January 24, 2010

ஆறாத வலி!

உயிர் கொடுத்த
உன் நினைவுகளும்
உயிர் வலிக்கும் பிரிவுகளுமாய்
என்னுள்
புதையுண்டு கிடக்கின்றன!


அடுக்கடுக்காய் மனச் சுமையை
அடிக்கடி நீ தந்தாய்
ஆண்டு பல சென்றாலும்
ஆறிடுமா இந்த வலி…?

ம்…
ஆண்டொன்று போய்
புதிய ஆண்டுகள்
பல பிறந்தாலும்
ஆழமாய்ப் பதிந்த வடு ஆறிடுமா…?

ம்கூம்…
ஆறாது ஆறாது
ஒரு போதும் ஆறாது!

அன்பு?

ஏனென்று தெரியவில்லை
என்னை அன்புக்கு பிடிக்கவில்லை
யார் இந்த அன்பு?


வெளிச்சம் இல்லா நேரத்தில் ஒளியாய் வந்தவள்
பசிக்கின்ற வேளையில் உணவாய் நின்றவள்
உறக்கத்தின் வேளையில் தலையணையாய் நின்றவள்

அதோடு
என் மரணத்தின் போது எமனுக்கு உதவியாய் நின்றவளும் அவளே.....